கோத்தகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - பொதுமக்கள் அவதி
கோத்தகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையாக சமையல் கியாஸ் சிலிண்டரை வினியோகம் செய்யும் வகையில் கோத்தகிரியில் 2 பேர், ஈளாடா மற்றும் கீழ்கோத்தகிரியில் தலா ஒருவர் என 4 வினியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம் நுகர்வோர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழுவினர், கோத்தகிரி தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மோகனா தலைமையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள், புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தாங்கள் கேட்கும் அளவுக்கு கியாஸ் நிறுவனங்கள் போதுமான சமையல் கியாஸ் சிலிண்டர்களை அனுப்பி வைக்காததே தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
மேலும் இன்னும் ஒரு வாரத்தில் தடையின்றி சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.