கூடுதுறையில் ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம்: சமுதாய கூடத்திற்கு மாணவர்கள் மாற்றம்
பரமத்திவேலூர் அருகே கூடுதுறையில் ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம் உள்ளதால் சமுதாய கூடத்திற்கு மாணவர்கள் மாற்றப்பட்டனர்.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் அருகே கூடுதுறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கூடுதுறை அருகே உள்ள அண்ணாநகர், மங்களமேடு, களிமேடு மற்றும் முனியப்பன் நகர் பகுதிகளை சேர்ந்த 16 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதால் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பள்ளியின் பின்புறம் கால்வாய் உள்ளதால் கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையால் மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்ததால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே பள்ளி கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால், இந்த பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். எனவே பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கூடுதுறையில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தருவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த மாதம் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கூடுதுறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை புதுப்பிக்கும் வரை, அதே பகுதியில் உள்ள ஒரு சமுதாய கூடத்திற்கு பள்ளியை மாற்றப்பட்டது. அங்கு அமர்ந்து தற்போது பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.