ஓசூரில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளால் நுரையுடன் வந்த தண்ணீர்

ஓசூரில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளால் தண்ணீர் நுரையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-05 22:30 GMT
ஓசூர், 

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக வரும் தண்ணீர் அளவும் அதிகரித்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போதைய நீர்இருப்பு 41.82 அடியாகும். நேற்று அணைக்கு வினாடிக்கு 1306 கன அடி தண்ணீர் வந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடுகிறது.

இந்த தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகளும் கலந்து வருவதால் தண்ணீர் கருப்பு நிறத்தில் அதிக அளவு நுரையுடன் பாய்ந்து வருகிறது. கெலவரப்பள்ளி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்களிலும் நுரை பொங்கி நின்றது. இதன் காரணமாக ஓசூர் பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

மேலும், அசுத்தமான நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், ஓசூர் பகுதி விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்