தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் - திருவள்ளூர் கலெக்டர் அறிவுரை

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசினார்.

Update: 2019-10-05 22:30 GMT
ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பயன்பெற காய்கறி செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் இளவரசி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 3 பேருக்கு தலா ரூ.3 லட்சம் காசோலைகள், சுய உதவிக்குழுவினர் பயன்பெற காய்கறி செடிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் சமையல் அறையிலேயே முடங்கி விடக்கூடாது.
ஏதாவது தொழில்கள் செய்து வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்க வேண்டும். வங்கிகள் வழங்கும் கடன்களை பெற்று மகளிர் சுய உதவிக்குழுவினர் சுய தொழில்கள் தொடங்கி மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் மழை நீரை சேகரிக்க தமிழக அரசு வழங்கும் ரூ.8 ஆயிரத்தை பெற்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்து கொன்டால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஊராட்சி செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்