கரூர் நகராட்சியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் 12 இடங்களில் நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையம் ஆணையர் தகவல்

கரூர் நகராட்சியில் குப்பைகளை வளமிக்கதாக மாற்றும் பொருட்டு ரூ.7 கோடி மதிப்பீட்டில் 12 இடங்களில் நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையம் ஏற்படுத்தப்படுகின்றன என ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-05 23:00 GMT
கரூர்,

கரூர் நகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. பெருகி வரும் நகரமயமாதலால் இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. மேலும் டெக்ஸ்டைல் நிறுவனம், பஸ்பாடி கட்டும் நிறுவனம், கொசுவலை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவை கரூர் நகரில் இயங்கி வருகின்றன. இதனால் வீடுகள், நிறுவனங்களில் இருந்து சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது என்பது நகராட்சிக்கு சவாலான வி‌‌ஷயம் தான். துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று சேகரிக்கப்படும் குப்பைகள் கரூர் அருகே வாங்கல் ரோட்டிலுள்ள குப்பை கிடங்கில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு மேலாண்மை செய்யப்பட்டன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டும், குப்பைகளை மறுசுழற்சி செய்ய தற்போது கரூர் நகராட்சியில் ரூ.7 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் கரூர் காந்தி கிராமம், அரிக்காரம்பாளையம், வெங்கமேடு வி.வி.ஜி. நகர், அருகம்பாளையம், பாலம்பாள்புரம், வ.உ.சி. தெரு, வடக்கு பசுபதிபாளையம், காமராஜ் நகர், கலெக்டர் அலுவலக பகுதி உள்பட 12 இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்தன.

மக்கும் குப்பைகள் உரமாவது எப்படி?

இதில் பாலம்பாள்புரம், அரிக்காரம்பாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட 6 இடங்களில் பணிகள் நிறைவுபெற்று அந்த உரம் தயாரிப்பு மையங்கள் கடந்த 2 மாதங்களாக செயல்பட்டு வருகின்றன. பேட்டரியால் இயங்குகிற ரிக்‌ஷா வாகனம் மூலம் வீடு வீடாக நேரில் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்கள் வாங்குகின்றனர். பின்னர் மக்கும் குப்பைகளாக பெறப்படுகிற காய்கறி, பழங்கள், சாப்பாடு, தோட்டத்தில் வெட்டப்படுகிற சிறிய செடிகள், கசங்கிய பேப்பர் உள்ளிட்ட கழிவுகளை நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையத்தில் உள்ள அரவை எந்திரத்தில் போட்டு அரைத்து தூளாக்குகின்றனர். பின்னர் அவற்றை எடுத்து அங்குள்ள உரம் தயாரிப்பு குழிகளில் போட்டு, அதனுடன் வெள்ளம்-தயிர் கலந்த நுண்ணுயிர் திரவத்தை ஊற்றி கிளறி விடுகின்றனர். இதையடுத்து சில நாட்களில் அவை மக்கி உரமாகிறது. உரம் தயாரிப்பு தொட்டியில் உருவாகும் புழுக்களை உண்பதற்காக அங்கு கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சிமெண்டு ஆலைகளுக்கு எரிபொருளாக...

இந்த உரம் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. காந்திகிராமத்தில் மட்டும் 40 டன் வரையிலான உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் உரிய சான்று பெற்று, ஆவணங்களுடன் வந்து உரம் தயாரிப்பு மையத்தில் உரத்தினை பெற்று கொள்ளலாம். இதேபோல் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், கண்ணாடி, தண்ணீர் பாட்டில், இரும்பு, தகரம், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை தரம்பிரித்து மறுசுழற்சியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. அந்த வகையில் கிடைக்கும் தொகையானது துப்புரவு பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. பிஸ்கட், மசாலா பொடி அடைத்து வைக்கப்பட்ட தாள்களில் சில்வர் முலாம் பூசப்படுவதால் அது போன்றவற்றை பொறுக்கி எடுத்து சிமெண்டு ஆலை உள்ளிட்டவற்றில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

குப்பைகளை சலித்து எடுக்க ஏற்பாடு

இது போன்ற குப்பை மேலாண்மையால் மிக குறைந்த அளவு குப்பை கழிவுகளே கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இதற்காக தான் குப்பை வரி என்பது நகராட்சி மூலம் வாங்கப்படுகிறது. தற்போது வாங்கல் ரோடு குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பைகளை சலித்து மறுசுழற்சி செய்ய டெண்டர் விடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. எனவே தூய்மையான நகராட்சியாக கரூரை மாற்ற பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டு, டம்ளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது. மாறாக பாக்குமரத்தட்டு, கைப்பை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சுற்றுப்புற சூழலை காக்க முன்வர வேண்டும் என கரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்