தமிழகத்தில் “உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திருமண உதவி திட்டம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, 2 ஆயிரத்து 484 பெண்களுக்கு ரூ.17.14 கோடி மதிப்பிலான திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த தேர்தலில் தி.மு.க. 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் 90 இடங்களை பிடித்தது. ஆனால் அ.தி.மு.க. யாருடைய ஒத்துழைப்பும், கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சர் பதவி ஒன்று தான் லட்சியம் என்ற கனவோடு மு.க.ஸ்டாலின் இருக்கிறார். பா.ஜனதா எங்கள் கூட்டணி கட்சி. அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களின் பங்களிப்பு இல்லை என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் இது மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை. இது தெரியவில்லை என்று சொன்னால் அவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவே தகுதியில்லை என்று அர்த்தம்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பு வேறாக அமைந்தாலும், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்து உள்ளனர். அதனை மு.க.ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் நடக்கக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் வரும். அதில் 100 சதவீதம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.