தவறுகளை சுட்டிக்காட்டிய பிரபலங்கள் மீது வழக்கு போடுவதா? திருநாவுக்கரசர் கண்டனம்
தவறுகளை சுட்டிக்காட்டிய பிரபலங்கள் மீது வழக்கு போடப்பட்டதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் நாங்குநேரிக்கு புறப்பட்டார். முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா அரசு பல வாக்குறுதிகளை கொடுத்து இருந்தது. ஆனால், இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பு இல்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த இடைத்தேர்தலால் ஆட்சி மாற்றம் வரப்போவது இல்லை. இருந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை எடை போடக்கூடிய தேர்தலாக அமையும். ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை கண்டிக்கும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.
2-வது முறையாக மத்தியில் ஆளும் பொறுப்பை ஏற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். நாடு முழுவதும் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது வழக்கு போடப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை பொறுத்து அப்பாவு வெற்றி பெறுவார் என தோன்றுகிறது. ஆனால் இதனை நீதிமன்றமே உறுதி செய்ய முடியும். விரைவில் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.