மருந்து பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்

மருந்து பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில தலைவர் சத்தியநாராயணன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-10-05 22:00 GMT
திண்டுக்கல்,

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரபாகர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். செயலாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணிநேரமாக நிர்ணயிக்க வேண்டும். மத்திய அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதார கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து மாநில தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு மருந்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, ஜி.எஸ்.டி. இல்லாத போது மருந்து பொருட்களுக்கு 4 சதவீதம் வரையே வரிவிதிப்பு இருந்தது. தற்போது 8 முதல் 12 சதவீதம் வரை மருந்து பொருட்களுக்கு வரிவிதிக்கப்படுகிறது. இதனால் உயிர் காக்கும் மருந்துகளை சாதாரண மக்களால் எளிதில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மருந்து பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எங்கள் சங்கம் மூலம் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.14 ஆயிரத்து 500 என மாநில அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இதனை எதிர்த்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கோர்ட்டு மூலம் தடை பெற்றுள்ளனர்.

இந்த தடை உத்தரவை ரத்து செய்து அரசு நிர்ணயம் செய்த சம்பளத்தை மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் மருந்து தயாரிப்பில் வெளிநாட்டு நிறுவனங்களை நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்