உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை 100 சதவீதம் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று தேனியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தெரிவித்தார்.
தேனி,
உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி நேற்று தேனிக்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில், அரசுத்துறை அலுவலர்களுடன் அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி பேசியதாவது:-
வாக்காளர் நலன்கருதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலை இணையதளம் வழியாக காண்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற அடிப்படையில் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம் போன்ற பணிகள் மேற்கொள்வதற்கு கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் பாதுகாப்பான கட்டிடமாக இருப்பதை உறுதி செய்வதுடன், அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பெட்டிகளை 100 சதவீதம் பயன்படுத்தும் வகையில் ஆயத்தமாக வைத்து இருப்பதை மண்டல அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய படிவங்கள், கையேடுகள் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் போதிய அளவில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) பாலசந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சங்கரநாராயணன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பொருட்கள் வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குச்சீட்டுகள், கையேடுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், படிவங்களின் இருப்பு பதிவேடு ஆகியவற்றை மாநில தேர்தல் ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தேனி, ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும் தேர்தல் பொருட்களின் வைப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.