மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2019-10-05 23:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக பிரித்து 2 மாதமாகிவிட்டது இன்று வரை அங்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. சந்தை நடப்பது கிடையாது. 3 முன்னாள் முதல்-அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோல இந்தியாவில் ஜனநாயகத்திற்கு எதிரான பல முடிவுகளை பா.ஜனதா எடுத்து வருகிறது. அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுபவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கின்றனர்.

2007-ல் நடந்த சம்பவத்திற்கு இதுவரை குற்றபத்திரிகை கிடையாது. பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை பற்றியோ அல்லது இயற்கை சீற்ற பாதிப்புக்களை பற்றியோ மத்திய அரசுக்கு எந்த அக்கரையும் கிடையாது.

தமிழகத்தில் நடைபெறும் 2 இடைதேர்தல்கள் மட்டுமல்ல, ஐகோர்ட்டு உத்தரவின்படி மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் ராதாபுரம் தொகுதியிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும். மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வில் நடைபெற்ற முறைகேடு பெரிய அளவில் நடைபெற்றிருக்கலாம்.

எனவே அதில் சி.பி.ஐ. விசாரணை தேவை. இது பற்றி நாடாளுமன்றத்திலும் நான் பேசுவேன். பிரதமர் தமிழில் பேசுவது இரட்டை வேடம் போடுவதாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்