அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2,465 வீடுகள் கட்டப்படும் - அதிகாரி தகவல்

அனைவருக்கும் வீடு திட்டத்தில் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 465 வீடுகள் கட்டப்படவுள்ளன என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-05 22:30 GMT
சிவகங்கை,

சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு திட்டம் பிரசார கையேடு வெளியீடு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளருமான மகேசன் காசிராஜன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசார கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயனாளிகள் சொந்தமாக வீடு கட்டுவதற்கான இடம், அந்த நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருக்க வேண்டும்.

வீடு கட்டிக்கொள்ளும் பயனாளிகள் தங்களது இடத்தில் குறைந்தது 300 சதுரடி பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ளலாம். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மானியமாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், 4 தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாவட்டத்தில் 3 நகராட்சி மற்றும் 12 பேரூராட்சிகளில் சுமார் ரூ.74 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 465 வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது.

அதில் 833 வீடுகள் கட்டும் பணி முடிவடைந்து விட்டது. 936 வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 696 வீடுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அரசுக்கு சொந்தமான, ஆட்சேபகரமான, மறு குடியமர்வு செய்யும் பொருட்டான 3 திட்டப்பகுதி நிலங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்களுக்கு 1,280 அடுக்குமாடி குடியிருப்புகள் வாரியத்தின் மூலம் ரூ.118.11 கோடியில் வீடு கட்டுவதற்கு மாவட்ட நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

பயனாளிகள் ஒரு குடியிருப்பிற்கு ஆகும் கட்டுமானத் தொகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக வாரியத்திற்கு செலுத்த வேண்டும். மாவட்டத்தில் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் 3 திட்டப்பகுதிகளில் 2 திட்டப்பகுதிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் முடிவடைந்த நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள ஒரு திட்டப்பகுதிக்கு நிலஉரிமை மாற்றம் பெறப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கப்படும் இத்திட்டம் முடிவடைந்த பிறகு அவர்களை குடியமர்வு செய்வது மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் இணைந்து அவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சிகளை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் முனியசாமி, குடிசை மாற்று வாரிய சமுதாய வளர்ச்சி அலுவலர் ராணி, உதவி நிர்வாக பொறியாளர் தில்லைக்குமரன், இளநிலை பொறியாளர் பாஸ்டின் விக்டர் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்