காலிங்கராயன் வாய்க்காலில் டேங்கர் லாரி கவிழ்ந்தது; டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்காலில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2019-10-05 22:15 GMT
ஈரோடு,

ஈரோடு சுண்ணாம்பு ஓடை காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் இருந்து ஆழ்துளை கிணற்று தண்ணீர் எடுக்கப்பட்டு மாநகராட்சி பகுதியில் டேங்கர் லாரிகள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலையில் ஈரோடு ஆர்.என்.புதூர் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 40) என்பவர் ஆழ்துளை கிணற்று தண்ணீரை டேங்கர் லாரியில் ஏற்றுவதற்காக அந்த லாரியை ஓட்டிச்சென்றார். அங்கு தண்ணீரை ஏற்றியபிறகு அவர் ஈரோடு நோக்கி காலிங்கராயன் வாய்க்கால் கரை வழியாக லாரியை ஓட்டினார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக வாய்க்கால் கரை சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் டிரைவர் பரமசிவம் லாரியை சேற்றில் சிக்காத வகையில் மெதுவாக ஓட்டிச்சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கரையில் இருந்து வாய்க்காலில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.

வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் அந்த லாரி, தண்ணீரில் மூழ்க தொடங்கியது. உடனே டிரைவர் பரமசிவம் வெளியே குதித்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு வாய்க்காலில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது. வாய்க் காலில் டேங்கர் லாரி கவிழ்ந்த தகவல் பரவியதும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் வாய்க்கால் கரையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்