சித்ரதுர்கா, கார்வாரில் வெவ்வேறு விபத்துகளில் பெங்களூருவை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் சாவு

சித்ரதுர்கா, கார்வாரில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெங்களூருவை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் இறந்தனர்.

Update: 2019-10-05 21:30 GMT
சிக்கமகளூரு, 

சித்ரதுர்கா, கார்வாரில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெங்களூருவை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் இறந்தனர்.

3 பேர் சாவு

பெங்களூருவில் இருந்து பீதருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நேற்று அதிகாலை 4 மணியளவில் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா சானகெரே பகுதியில் சென்று கொண்டு இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் பஸ்சின் முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை அதன் டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் பின்னால் சென்ற அரசு பஸ், லாரியின் பின்பகுதியில் மோதியது.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் செல்லகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்சில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி பஸ் பயணிகள் 3 பேர் உடல்நசுங்கி இறந்தது தெரியவந்தது. மேலும் டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக செல்லகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதற்கிடையே விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர்களில் ஒருவர் பெங்களூருவை சேர்ந்த விஜயகுமார்(வயது 37) என்பது தெரியவந்தது. மற்ற 2 பேரின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. இதனை தொடர்ந்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து நடந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை என்பதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து பாதிப்பை சீர்செய்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து செல்லகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு விபத்து

கார்வார் மாவட்டம் அங்கோலா தாலுகா ஹெப்பூலா பகுதியில் நேற்று காலை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணித்த பெங்களூருவை சேர்ந்த சந்திரமவுலி(55), ராகவேந்திரா(25) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அங்கோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்