மைசூரு அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நடந்தது
மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நடைபெற்றது.
மைசூரு,
மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனை வளாகத்தில் ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நடைபெற்றது.
மைசூரு தசரா விழா
வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா கடந்த மாதம்(செப்டம்பர்) 29-ந் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தசரா விழாவையொட்டி மைசூரு நகரில் தினமும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அர்ஜூனா யானை கம்பீரமாக சுமந்து செல்ல, மற்ற யானைகள் அதன் பின்னால் செல்லும். அதனைத்தொடர்ந்து அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை
இந்த நிலையில், தசரா விழாவின் 7-ம் நாளான நேற்று ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நடைபெற்றது. அதாவது, ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு, அர்ஜூனா யானை அரண்மனை வளாகத்துக்கு வரும். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் ஏறி முதல்-மந்திரி எடியூரப்பா, தங்க அம்பாரிக்குள் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் தூவி, ஊர்வலத்தை தொடங்கி வைப்பார். அதேபோன்று நேற்று அர்ஜூனா யானை, அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்கு அருகில் வந்து நின்றது. அப்போது யானை மீது மலர் தூவப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மைசூரு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மைசூரு அரண்மனை வளாகத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.
சரஸ்வதி பூஜை
மைசூரு அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் சார்பில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அரண்மனையில் மன்னர் குடும்பத்தினர் சார்பில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதில் இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் கலந்துகொண்டு சரஸ்வதி படத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.