இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் சாதனை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்

இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Update: 2019-10-05 23:15 GMT
சாத்தூர்,

தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தலா 1 பவுன் தங்கம் வழங்கப்படுகிறது. இதன்படி சாத்தூரில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்த விழாவில் ரூ.3 கோடியே 35 லட்சத்து 43 ஆயிரத்து 928 மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியினை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். இதில் 503 பெண்களுக்கு தலா 1 பவுன் தங்க காசு மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி பொதுமக்கள் அந்த திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தாத திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் நமது மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து உழைக்கும் மகளிருக்கும், மானிய விலையிலான இரு சக்கர வாகனங்களை வழங்கி தமிழகத்திலேயே முதல் மாவட்டம் என்ற சாதனையை எய்திருக்கிறது. அந்த அளவிற்கு நல்ல ஒரு நிர்வாகத்தை கலெக்டரின் வழிகாட்டுதலின்படி அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

நமது மாவட்டத்தில் 4,200 பேருக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கப்படவுள்ளது. ஜெயலலிதாவின் திட்டத்தால் இன்று தமிழகம் கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேலும் தமிழக அரசு பெண்களின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களின் பயனாக பட்டப்படிப்பு முடித்த பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ரூ.26.70 கோடி மதிப்பீட்டில் 65 கண்மாய்கள் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்துப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், மாநில பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, ராமராஜ் பாண்டியன், மணிகண்டன் மற்றும் நடராஜன், ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ், ரூ.247 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணியும், ரூ.193 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணியும் நடந்து வருகிறது. இந்த இரு திட்டங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே பணிகள் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் தொடர்வது குறித்தும், விரைவில் நிறைவேற்றுவது குறித்தும் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் ஜோதிகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் ராஜவர்மன் எம்.எல்.ஏ., நகராட்சி செயற்பொறியாளர் நடராஜன், நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார துறை அதிகாரிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.

திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், திட்டம் நிறைவுறும் காலம் குறித்தும் கேட்டறிந்த அமைச்சர், விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு, நீர்த்தேக்கத்தில் இருப்பு உள்ள தண்ணீரின் அளவு உள்ளிட்டவைகளை கேட்டுக்கொண்ட அவர் சூழலுக்கு ஏற்ப சீரான அளவு குடிநீர் வழங்க அறிவுறுத்தினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக டெங்கு காய்ச்சலால் ராஜபாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டதால், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற உத்தரவிட்டார். நகராட்சி சுகாதார பிரிவில் 20 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய டிரைவர் சந்திரன் என்பவருக்கு அமைச்சர் தங்கப்பதக்கத்தை அணிவித்தார்.முன்னதாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணிதரத்தை மேம்படுத்தும் வகையில், பேட்டரியால் இயங்கும் 70 குப்பை அள்ளும் வாகனங்களை அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரன், மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்