குமாரபாளையத்தில் மொபட்- லாரி மோதல்: மின்வாரிய பெண் ஊழியர், மகளுடன் உடல் நசுங்கி பலி

குமாரபாளையத்தில், பள்ளிக்கு விட சென்றபோது மொபட் மீது லாரி மோதியதில் மின்வாரிய பெண் ஊழியர்-மகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-10-04 23:00 GMT
குமாரபாளையம், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை வாத்தியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 37). இவர் குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (32). இவர் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு படிக்கும் யஷ்வந்த் (8) என்ற மகனும், 1-ம் வகுப்பு படிக்கும் இன்சிகா (5) என்ற மகளும் இருந்தனர். சித்ரா தினமும் வேலைக்கு செல்லும்போது மொபட்டில் மகன், மகளை பள்ளியில் விட்டு விட்டு செல்வது வழக்கம். நேற்று காலை சித்ரா 2 பேரையும் மொபட்டில் அழைத்துச்சென்று, முதலில் மகன் யஷ்வந்தை பள்ளியில் விட்டு விட்டு, பின்னர் மகள் இன்சிகாவை பள்ளியில் விடுவதற்காக சென்றார். அப்போது சித்ரா குமாரபாளையம் சர்வீஸ் ரோட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி வேகமாக சென்ற லாரி மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சித்ராவும், இன்சிகாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் கோவை நாய்க்கன்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மூர்த்தி (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் சித்ராவின் கணவர் ஜெயகுமாரின் தந்தை தற்போது விபத்து நடந்த அதே இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற வாகனம் மோதி படுகாயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். தற்போது கவலைக்கிடமான நிலையில் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஜெயகுமார் அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் விபத்தில் அவரது மனைவியும், மகளும் இறந்ததையறிந்த ஜெயகுமார் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அங்கு மனைவி, மகளின் உடல்களை பார்த்து அவர் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. தற்போது தாய்-மகள் பலியான இடத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11 விபத்துகள் நடந்து, அதில் 4 பேர் இறந்துள்ளதாகவும், எனவே அந்த இடத்தில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்கவேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்