ஓசூர் அருகே, தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் - தேடும் பணி தீவிரம்

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மாணவர் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-10-04 23:00 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சப்படி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் குருமூர்த்தி(வயது 21). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை குருமூர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் கோபசந்திரம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது குருமூர்த்தி ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். குருமூர்த்திக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனக்கூச்சலிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் இது தொடர்பாக சூளகிரி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் குருமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அப்போது அந்த பகுதியில் இடியுடன், கனமழை பெய்யத் தொடங்கியது. கொட்டும் மழையிலும் மாணவரை தேடும் பணி நடைபெற்றது. இரவு வரை இந்த பணி நீடித்தது. பின்னர் இரவு நேரம் ஆகிவிட்டதாலும், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததாலும் மாணவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் கல்லூரி மாணவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்