பாதாள சாக்கடை குழியில் அடைப்புகளை அகற்ற தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.48 லட்சத்தில் ரோபோ எந்திரம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
பாதாள சாக்கடை குழியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.48 லட்சத்தில் வழங்கப்பட்ட ரோபோ எந்திரத்தின் செயல்பாட்டை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட்டால், அடைப்புகளை மனிதர்களே குழிக்குள் இறங்கி அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவுவதுடன், விஷவாயு தாக்கி இறக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டது.
இதை தவிர்க்க எந்திரங்கள் உதவியுடன் கழிவுகளை அகற்ற வேண்டும். பாதாள சாக்கடை குழியில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் தஞ்சை மாநகராட்சிக்கு பண்டிக்கூட் எனும் ரோபோ எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.48 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.
இந்த ரோபோ எந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று தொடங்கி வைத்து அதன் செயல்பாட்டை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற ரோபோ எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடை குழிக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்வது தவிர்க்கப்படும். விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாது. இது தஞ்சை மாநகராட்சியில் ஒரு சாதனையாகும். ரோபோ எந்திரத்தின் பயன்பாடு மூலம் தஞ்சை மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ள 23 ஆயிரத்து 653 குடும்பத்தினர் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தஞ்சை கண்ணன்நகரில் பாதாள சாக்கடை குழியில் ஏற்பட்ட அடைப்பை ரோபோ எந்திரம் மூலம் எப்படி அகற்றுவது என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் நிர்வாக இயக்குனர் அனுராக்ஷர்மா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.