அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை அருகே உள்ள ஓவரூர் ஊராட்சி வெள்ளங்கால் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிராம கமிட்டி தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி உறுப்பினர்கள் முருகையன், செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பாசனதாரர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், கிராம கமிட்டி நிர்வாகிகள் காளிமுத்து, ஆறுமுகம், குமார், மகளிர் அமைப்பு நிர்வாகிகள் அசோத்அம்மாள், லதா, கலா, ஜெயா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளங்கால் கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். வெள்ளங்கால் நடுநிலைப்பள்ளிக்கு தரைத்தளம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜன் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.