திருப்பூரில் பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்; போலீசார் கண்டித்து அனுப்பிவைத்தனர்

திருப்பூரில் பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கண்டித்து அனுப்பிவைத் தனர்.

Update: 2019-10-04 22:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் வீரபாண்டியில் இருந்து 15 வேலம்பாளையத்துக்கு அரசு டவுன் பஸ் நேற்று காலை புறப்பட்டு சென்றது. சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பஸ்சில் பயணம் செய்தனர். கல்லூரியில் நேற்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து கல்லூரிக்கு சென்றனர்.

அவர்கள் வந்த பஸ்சுக்கு மாலை அணிவிப்பது, அலங்காரம் செய்வது போன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ்சுக்குள் கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டதுடன் பெண்கள் இருக்கைக்கு அருகே சென்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் மாணவர்களை சத்தம் போட்டுள்ளனர். அப்போது மாணவர்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர், கல்லூரிக்கு செல்லாமல் நேரடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு கொண்டு வந்து பஸ்சை நிறுத்தினார். பின்னர் நடந்த சம்பவத்தை அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். மாணவர்கள் அனைவரையும் பஸ்சில் இருந்து இறக்கி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுபோல் சிக்கண்ணா கல்லூரியில் உள்ள ஒரு துறையை சேர்ந்த பேராசிரியரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். பின்னர் மாணவர்களை போலீசார் கண்டித்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகள்