நீராடுவோர் விட்டுச்செல்லும் துணிகளால் மாசடையும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல்; “முழுமையாக அகற்ற விரைந்து நடவடிக்கை”-கலெக்டர் தகவல்

நீராடுவோர் விட்டுச்செல்லும் துணிகளால் புண்ணிய தீர்த்தமான ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் மாசடைந்துள்ளது. அந்த துணிகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

Update: 2019-10-04 23:30 GMT
ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்கம் உள்ள கோவில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மற்ற எந்த ஒரு கோவில்களிலும் இல்லாத ஒரு சிறப்பு இங்கு மட்டுமே உள்ளது.

அதாவது, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் நீராடினால் அனைத்து விதமான பாவங்களும், தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். எனவே ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருமே முதலில் அக்னி தீர்த்த கடலில்தான் நீராடுவார்கள். அவ்வாறு புனித நீராடி விட்டு தங்களது பாவம், தோஷங்கள் நீங்க தாங்கள் அணிந்து வந்த ஆடைகளை அக்னி தீர்த்த கடலிலேயே விட்டுச் செல்வதும் பக்தர்களின் வழக்கமாக உள்ளது.

இதனால் அக்னி தீர்த்த கடல் பகுதி முழுவதும் துணிகளால் சூழப்பட்டு சுகாதார கேடாக காட்சியளிக்கிறது. இதனால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கடலில் இறங்கி நீராட முடியாமலும், துணிகள் கால்களில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பலர் கடலின் உள்ளே கிடக்கும் துணிகளை மிதிக்கும் போது முகம் சுளிப்பதை காண முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் யாரும் துணிகளை போடக்கூடாது. அப்படி துணிகளை போடுபவர்கள் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். இதனை நகராட்சி ஊழியர்கள் முறையாக அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. கடலில் நீராடும் பக்தர்கள் துணிகளை கடலில் போடக்கூடாது என கடற்கரையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கடலிலேயே துணிகளைவிட்டு செல்வது தொடர்ந்து வருகிறது.

இதுதவிர அக்னி தீர்த்த கடலில் ஓட்டல்கள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் கடலானது அதிக துர்நாற்றத்துடன் இருப்பதுடன் அதிக அளவில் மாசடைந்தும் காட்சி அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் மூக்கை பிடித்து கொண்டு நீராடி செல்லும் ஒரு அவலநிலையும், பெரும்பாலான பக்தர்கள் துர்நாற்றத்தால் கடலில், இறங்கி நீராட விருப்பமின்றி செல்லும் நிலையும் காணப்படுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது கூறியதாவது:-

அக்னி தீர்த்த கடலில் நீராட வரும் பக்தர்கள் துணிகளை கடலில் போடக்கூடாது என பலமுறை அறிவுறுத்தி உள்ளோம். கடற்கரையில் பல இடங்களில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி தொடர்ந்து பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் துணிகளை போட்டுச் செல்கின்றனர். இதுபோன்று பக்தர்கள் கடலில் போட்டுச் செல்லும் துணிகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கடலில் கிடக்கும் துணிகள் முழுமையாக அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்கள் கடலில் துணிகளை போடாமல் கடற்கரையில் வைத்துள்ள தொட்டிகளில்தான் போட வேண்டும். கடலில் கழிவுநீர் கலக்காத வகையில் ராமேசுவரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பக்தர்களும், பொதுமக்களும் சுகாதாரத்தை பேணிகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்