காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், விவசாயிகள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என பிரசாரம் செய்தார்.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட தோட்டாக்குடி, பாக்கியநாதபுரம், மருதகுளம், தெற்கு பத்தினிபாறை, வடக்கு பத்தினிபாறை, ஆழ்வானேரி, கீழ் ஆழ்வானேரி, புதுக்குறிச்சி, பருத்திபாடு, மறவன்குளம், வடக்கு மறவன்குளம், நெல்லையப்பபுரம், நெல்லை நகர், முதலைகுளம், தாழைகுளம், நெடுங்குளம், அரியகுளம், தெய்வநாயகபேரி, அம்பலம், ஆயர்குளம், கீழ அரியகுளம், மேல அரியகுளம், உன்னங்குளம், ஸ்ரீரெங்கராஜபுரம், வடக்கு ஆரம்பூண்டார்குளம், பிள்ளைகுளம், தேவன்குளம், இளையார்குளம், புத்தனேரி, சிங்கனேரி, காரங்காடு கீழுர், மேலூர், இறைப்புவாரி, பட்டர்புரம், மீனாட்சிநாதபுரம், ஏமன்குளம், வலியனேரி, பனையங்குளம் ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் நின்றுகொண்டும், தெருக்களில் நடந்து சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் பெருந்தலைவர் காமராஜரால் வளர்க்கப்பட்டவன். அவர் முதல்- அமைச்சராக இருக்கும்போது மக்களுக்கு செய்த கல்வி புரட்சி, சத்துணவு திட்டம், சீருடை திட்டங்களை பார்த்து ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். நான் கஷ்டப்பட்டு வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறி இருக்கிறேன். என்னுடைய உழைப்பின் பயனை மக்களுக்கு அளிக்கத்தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.
இந்த தொகுதியில் உள்ள விவசாயிகள் இன்னும் மண்வெட்டியை பிடித்துதான் வேலை செய்யும் நிலை உள்ளது. இதனை மாற்றி விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி அவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன். இந்த தொகுதியில் கல்வி தரத்தை உயர்த்த பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தில் ஞானதிரவியம் எம்.பி., நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுடலைக்கண்ணு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவக்குமார், பழனிநாடார், மாவட்ட சக்தி ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காடு காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், வசந்தகுமார் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், அ.தி.மு.க.வினர் தோல்வி பயத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெளியூர் வேட்பாளர் என்று விமர்சனம் செய்கின்றனர். அ.தி.மு.க.வினர் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் காங்கிரசுக்கு எதிராக பேசுகிறார்கள். வேட்பாளர் ரூபி மனோகரன் 75 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்“ என்றார்.