பிளஸ்-2 படித்து நோயாளிகளுக்கு சிகிச்சை: போலி டாக்டர் சிக்கினார்

சோழிங்கநல்லூரில் பிளஸ்-2 வரை படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2019-10-04 23:30 GMT
சோழிங்கநல்லூர்,

சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலர் கார்த்திகேயன், சுகாதாரஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள காந்திநகர் பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

அப்போது காந்திநகர் பகுதியைச்சேர்ந்த ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு கங்கையம்மன்கோவில் தெருவில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார். அதற்கு அதிகாரிகள் மருத்துவம் பார்த்த டாக்டர் சீட்டை கேட்டுள்ளனர். அந்த நபர் தனக்கு மருத்துவர் சீட்டு ஏதும் வழங்கவில்லை என்றும், குளுக்கோஸ் ஏற்றி மாத்திரை மட்டும் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த கிளினிக்கில் மருத்துவம் பார்த்து கொண்டிருந்த டாக்டரிடம் மருத்துவம் பணி செய்வதற்கான சான்று உள்ளதா? என சோதித்தனர். ஆனால் அவரிடம் சான்று எதுவும் இல்லாததால், இது குறித்து செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் (வயது 37) என்பதும், பிளஸ்-2 வரை படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கன்னியப்பனை கைது செய்த செம்மஞ்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்