மேலும் 14 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் 2-வது பட்டியலிலும் ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டே பெயர்கள் இல்லை

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட 14 பேர் அடங்கிய 2-வது வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது.

Update: 2019-10-03 22:45 GMT
மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட 14 பேர் அடங்கிய 2-வது வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டது. இதிலும் ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டேயின் பெயர்கள் இடம் பெறவில்லை.

பா.ஜனதா வேட்பாளர்கள்

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆளும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அண்மையில் தங்களது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. இதில் பா.ஜனதா 125 தொகுதிகளுக்கும், சிவசேனா 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தன. பா.ஜனதாவின் முதல் பட்டியலில் அக்கட்சியின் முக்கிய தலைவரான ஏக்நாத் கட்சே, மாநில மந்திரிகள் வினோத் தாவ்டே, சந்திரசேகர் பவன்குலே ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை.

இது சட்டசபை தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் ஏக்நாத் கட்சே முக்தாய்நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார்.

இரண்டாவது பட்டியல்

அவர் தனது பெயர் பா.ஜனதாவின் 2-வது வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், பா.ஜனதா தனது 2-வது வேட்பாளர் பட்டியலை நேற்றுமுன்தினம் இரவு வெளியிட்டது. இதில் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் இந்த பட்டியலிலும் ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டே, சந்திரசேகர் பவன்குலே ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை.

இதன் மூலம் இந்த முறை மேற்படி 3 பேரும் பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதுவரை பா.ஜனதா 139 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்