தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பா.ஜனதாவில் இணைந்த பெண் பிரமுகருக்கு தேர்தல் டிக்கெட்

பா.ஜனதாவில் இணைந்த கைஜ் தொகுதி தேசியவாத காங்கிரஸ் பெண் பிரமுகருக்கு அதே தொகுதியில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு கொடுத்து உள்ளது.

Update: 2019-10-03 23:00 GMT
மும்பை, 

பா.ஜனதாவில் இணைந்த கைஜ் தொகுதி தேசியவாத காங்கிரஸ் பெண் பிரமுகருக்கு அதே தொகுதியில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பு கொடுத்து உள்ளது.

மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு சீட்

மராட்டிய சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயம் கருதி எதிக்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனாவுக்கு கட்சி தாவி வந்தனர். இதில் பா.ஜனதாவில் ஐக்கியமான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சி தேர்தல் சீட் கொடுத்து வருகிறது.

பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து வந்து இணைந்த காளிதாஸ் கோலம்கர், ஹர்ஷவர்தன் பாட்டீல், ராதாகிருஷ்ண விகே பாட்டீல், வைபவ் பிச்சாட், ஜெய்குமார் கோரே, மதன் போஸ்லே, ரானா ஜெக்தீஷ் பாட்டீல், சிவேந்திரராஜே போஸ்லே, சந்தீப் நாயக் உள்ளிட்டோரது பெயர்கள் இடம் பெற்றன.

பெண் வேட்பாளர்

இந்தநிலையில், பா.ஜனதாவின் 2-வது வேட்பாளர் பட்டியலிலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கைஜ் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த நமிதா முன்டாடா பா.ஜனதாவில் இணைந்த கையோடு அதே தொகுதியின் பா.ஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருக்கிறார்.

இதேபோல பா.ஜனதாவில் இணைந்த கோண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபால் தாஸ் அகர்வால் அதே தொகுதி பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

வஞ்சித் பகுஜன் அகாடி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் சாங்கிலியில் போட்டியிட்டு தோல்வியை தழுவி, பா.ஜனதாவில் இணைந்த கோபிசந்த் பதரல்கர் அக்கட்சியின் பாராமதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்