கிருஷ்ணகிரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அரசின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில் அனைத்து துறைகள் வளர்ச்சி பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகள், 6 பேரூராட்சிகள், ஓசூர் நகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்குவது குறித்தும், வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பு ஏற்பட கூடிய இடங்கள் என 35 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறைகளும் மீட்புபணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். மழை காலங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர காய்ச்சல் பிரிவு, சாதாரண காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்படும்.
பருவநிலை மாற்றம் மற்றும் மழை காலங்களில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மருத்துவப்பணியாளர்கள், ஊரக வளர்ச்சி துறை மற்றும் பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை என அனைத்து துறையினரும் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். டெங்கு கொசுக்களை ஒழிக்கவும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் பள்ளி மாணவ, மாணவிகள் தூய்மை தூதுவர்களாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, வன அலுவலர் தீபக் பில்கி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஹரிஹரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளிடையே தூய்மை பணிகள் குறித்து கலந்துரையாடினார்.