சத்தி அருகே, பஸ்-லாரி மோதல்; 10 பேர் படுகாயம்
சத்தி அருகே பஸ்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
சத்தியமங்கலம்,
கோவையில் இருந்து சத்தியமங்கலம் வழியாக சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் பஸ் சென்றுகொண்டு இருந்தது. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த அன்பழகன் (வயது 50) என்பவர் பஸ்சை ஓட்டினார். 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தார்கள்.
சத்தியமங்கலம் அருகே மூலக்கிணறு எருமடைபள்ளம் என்ற இடத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் பஸ் சென்றுகொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரியும், பஸ்சும் திடீரென பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் இரு வாகனங்களின் முன்புறமும் நொறுங்கியது.
விபத்தின் இடிபாடுகளில் சிக்கி பஸ் பயணிகளும், லாரியின் டிரைவர் அருகே இருந்தவர்களும் ‘அய்யோ அம்மா‘ என்று அலறினார்கள். இதில் லாரி டிரைவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த இந்திரஜித் (60). கிளனர் கோவையை சேர்ந்த கோவிந்தன் (48), மாற்று டிரைவர் குமாரசாமி (28), அவர் அருகே அமர்ந்திருந்து வந்த சித்தேஷ் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த கோபால்ராஜ் (46), கோவையை சேர்ந்த சசி(49), சத்தியமங்கலம் ராஜ்குமார் (33), புதுகுய்யனூரை சேர்ந்த ஸ்ரீதர், சிக்மக்களூரை சேர்ந்த குமார் (25) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்கள்.
அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டார்கள். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து 10 பேரையும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அனைவரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள உப்புபள்ளத்தை சேர்ந்த ராமசாமி(65), அவருடைய மனைவி சுப்புலட்சுமி(60) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் அத்தாணி ரோட்டில் நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் வினோத்குமார் (19), தினேஷ் (19), மூர்த்தி (19) ஆகிய வந்த மோட்டார்சைக்கிளும் ராமசாமியின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராவிதமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 5 பேரும் காயம் அடைந்தனர். இதில் வினோத்குமார் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 4 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.