போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை: மதுரை பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.8¼ லட்சம் சிக்கியது
மதுரை பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் இருந்து கட்டு, கட்டாக ரூ.8¼ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை,
மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 36). எம்.டெக் படித்துள்ள இவர் மதுரை பொதுப்பணித்துறையில் நீர்வள ஆதார பிரிவில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அரசு சார்பில் தல்லாகுளம் பகுதியில் குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அங்கு குடியிருக்காமல் அதனை தனது அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். இந்தநிலையில் செந்தில்குமாருக்கு காண்டிராக்டர் ஒருவர் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப் போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் அம்புரோஸ் ஜெயராஜ், கண்ணன், குமரகுரு, ரமேஷ் பிரபா ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று இரவு செந்தில்குமார் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். அந்த சமயம் செந்தில்குமார் மட்டும் உள்ளே தனியாக இருந்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பையை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை எண்ணிப்பார்த்த போது அதில் ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து செந்தில்குமாரிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மணிக்கு தொடங்கிய விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.