செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சம்பள பாக்கி: 2 பேர் மீது வழக்குப்பதிவு - கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை

செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சம்பள பாக்கி வழக்கில் ராணிப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி 2 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-03 22:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 38). இவர், தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ஒரு கம்பெனிக்கு 6 பேர் வீதம் அந்த தொழிற்சாலையின் பல கிளைகளுக்கு செக்யூரிட்டி வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்துள்ளார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல், இவ்வாறு அனுப்பப்பட்ட செக்யூரிட்டிகளுக்கு சம்பள தொகை மொத்தம் 21 லட்சத்து 52 ஆயிரத்து 69 ரூபாய் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து பணம் கேட்டு சென்ற போது தொழிற்சாலையை சேர்ந்த முகமதுசாலிம், மார்ஷல் சுரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேஷ்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ராஜேஷ்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் ராணிப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி முகமதுசாலிம், மார்ஷல் சுரேஷ் ஆகிய 2 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்