ஓமலூர் அருகே மாணவி மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக பெற்றோர் போராட்டம்
ஓமலூர் அருகே மர்மமான முறையில் இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
சேலம்,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மனைவி பாப்பா. இவர்களுடைய மகள் இளவரசி(வயது 13). இவர் ஓமலூர் அருகே உள்ள கணவாய்புதூர் உண்டு உறைவிட பள்ளி விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று உடல் நிலை சரியில்லாத அவரை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவி இறந்தார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தீவட்டிப்பட்டி போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கூறினர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மாணவியின் உடல் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதால் அவருடைய உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக மாணவியின் பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி போலீசார் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு இளவரசி உடலை பெற்றுச்சென்றனர்.