கர்நாடக மாநிலத்தில் இருந்து 6 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

Update: 2019-10-03 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்கவேண்டிய உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கினால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை.

தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி பல்வேறு பொது நல வழக்குகள் ஐகோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த மாதம் (நவம்பர்) உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக தமிழக அரசு கோர்ட்டில் உறுதி அளித்து உள்ளது. அத்துடன் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

6 ஆயிரம் எந்திரங்கள்

இதற்காக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் செய்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து 3 கண்டெய்னர் லாரிகளில் 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சிக்கு வந்து சேர்ந்து உள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்து சேர்ந்து உள்ள இந்த எந்திரங்களின் ஒரு பகுதி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று லாரிகளில் இருந்து இறக்கப்பட்டன. பின்னர் அவை 3-வது தளத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அடுக்கி வைக்கப்பட்டன.

மற்ற 2 லாரிகளில் வந்த எந்திரங்கள் வண்ணாங்கோவில் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இறக்கப்பட்டன. திருச்சி மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. திருச்சி மாநகராட்சி வருவாய் அதிகாரி ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார், ராம்நகர், ரெய்ச்சூர் ஆகிய நகரங்களில் இருந்து இந்த எந்திரங்களை கொண்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்