ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், சாலை விதிகளுக்கு நடிகர் வடிவேலு நகைச்சுவை காட்சி மீம்ஸ் - வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து நடிகர் வடிவேலு மீம்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-10-03 22:30 GMT
ராமநாதபுரம்,

சாலை விபத்துகளை தவிர்க்க தமிழக அரசு காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விபத்துகளை தவிர்த்து அதன்மூலம் உயிர் பலியை குறைக்கவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் பலவித உத்திகளை கையாண்டு மக்களிடையே சாலை விதிகளை கடைபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மக்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் மக்களின் மனம் கவர்ந்த விசயங்கள் மூலம் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் போக்குவரத்தின்போது மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வுகள் குறித்து விளக்கி கூறி மக்களை விழிப்படைய செய்து வருகிறது. அதிலும் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் மீம்ஸ்கள் மூலம் போக்குவரத்து விதிகளை விளக்கி கூறி வருகின்றனர். இதற்கு பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் படகாட்சிகளை வைத்து மீம்ஸ் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் இணைய தளம் மற்றும் சமூக வலைதள பிரிவு அதிகாரிகள் வடிவேலுவின் மீம்ஸ் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தவறு அதனை மீறி செல்வதால் விபத்தில் சிக்கி கொள்வது குறித்தும், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் பல விழிப்புணர்வு மீம்ஸ்களை தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த மீம்ஸ்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் இந்த மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் அனைவரையும் சென்றடையும். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இந்த புதுவித யுக்தியை கையாண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்