‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடங்களை திறக்கக்கோரி, கொடைக்கானலில் 2 ஆயிரம் கடைகள் அடைப்பு; படகு போக்குவரத்து நிறுத்தம்

கொடைக்கானலில் ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடங்களை திறக்கக்கோரி மக்கள் நல பாதுகாப்பு குழு சார்பில் கடையடைப்பு, ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

Update: 2019-10-03 22:00 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானல் நகரில் விதி முறைகளை மீறி கட்டப்பட்டதாக 350-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். தங்கும் விடுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடங்களை திறக்கவேண்டும். அத்துடன் அனைத்து கட்டிடங்களையும் வரன்முறைப்படுத்த வேண்டும். கொடைக்கானல் நகரில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளித்து வரன்முறைப்படுத்த வேண்டும். நகராட்சி ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள், அனைத்து சங்கங்கள், சமுதாயத்தினர், பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்கிய மக்கள் நல பாதுகாப்பு குழு சார்பில் முழு கடையடைப்பு நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது.

இதனையொட்டி மக்கள் நல பாதுகாப்பு குழு சார்பில் ஊர்வலம் நடந்தது. மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மக்கள் நல பாதுகாப்புக் குழுவை சேர்ந்த முன்னாள் நகரசபை தலைவர்கள் கோவிந்தன், முகமது இப்ராகிம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று ஏரிச்சாலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொடைக்கானல் பகுதியில் தங்கும் விடுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சிறு வணிகர்களின் கடைகள் அகற்றப்பட்டதால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை மக்கள் துணையுடன் மண்டலங்களாக பிரிக்கவேண்டும்.

நகராட்சி ஆணையர் நடவடிக்கை மக்கள் விரோத செயலாக உள்ளது. இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவர் மீது மாவட்ட கலெக்டர், அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி உயர் அதிகாரிகள் ஆகியோர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராட்டம் தொடங்கியுள்ளது. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற தவறினால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் கொடைக்கானல் போட் அண்டு ரோயிங் கிளப்பின் சார்பாக படகுகள், சுற்றுலா வாகனங்கள் என எதுவும் இயக்கப்படவில்லை. 100 சதவீத கடை அடைப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். 

மேலும் செய்திகள்