பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் உணவு வீணாவதை தடுத்து இல்லாதவருக்கு வழங்க குளிர்சாதன பெட்டி
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் உணவு வீணாவதை தடுத்து இல்லாதவர்களுக்கு வழங்க குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் உணவு வீணாவதை தடுத்து இல்லாதவர்களுக்கு வழங்க குளிர்சாதன பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
உணவு வீணாவதை தடுக்க...
பெங்களூரு சிட்டி கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பலர் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் உள்ள கட்டிடத்தின் அருகே அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலர் உணவுகளை எடுத்து செல்கிறார்கள்.
பல பயணிகள் தங்களது தேவைக்கு போக மீதியாகும் உணவை குப்பையில் வீசுகிறார்கள். இதை தடுக்க தென்மேற்கு ரெயில்வேயின் பெங்களூரு ரெயில்வே மண்டல அதிகாரிகள் தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பசியால் வாடுபவர்கள்...
அதன்படி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் புதிதாக குளிர்சாதன பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதன பெட்டியை பெங்களூரு மண்டல ரெயில்வேயின் மேலாளர் அசோக் குமார் வர்மா திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘இந்த குளிர்சாதன பெட்டியின் உள்ளே பொதுமக்கள் தங்களது தேவைக்கு போக மீதியாகும் உணவுகளை வைத்து செல்லலாம். பழங்கள் உள்பட அனைத்து வகையான உணவு பொருட்களையும் வைக்கலாம். இந்த உணவுகளை பசியால் வாடுபவர்கள் இலவசமாக எடுத்து சாப்பிடலாம். இதன்மூலம் தினமும் ஏராளமானவர்கள் பயன் அடைவார்கள். பெங்களூரு மண்டல ரெயில்வேயில் இன்னும் புதிதாக 50 குளிர்சாதன பெட்டிகள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது‘ என்றார்.