தார்வாரில் சம்பவம் மத்திய மந்திரி திட்டியதால் மேடையிலேயே கண்கலங்கிய பெண் கலெக்டர்

தார்வாரில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி திட்டியதால், மாவட்ட கலெக்டர் தீபா சோழன் மேடையிலேயே கண்கலங்கினார்.

Update: 2019-10-03 22:45 GMT
தார்வார், 

தார்வாரில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி திட்டியதால், மாவட்ட கலெக்டர் தீபா சோழன் மேடையிலேயே கண்கலங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காந்தி ஜெயந்தி விழா

தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம், உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட கல்வித்துறை, அரசு ஊழியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி விழா நடந்தது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், மாவட்ட கலெக்டர் தீபா சோழன் உள்பட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கலெக்டர் தீபா சோழனை கடுமையாக திட்டினார்.

கலெக்டர் தீபா சோழன் கண்கலங்கினார்

“இவ்வளவு பெரிய அளவில் விழா நடத்துகிறீர்கள். ஆனால் இதைப்பற்றி ஏன் எனக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஏன் செய்யவில்லை. குறிப்பாக ஏன் பத்திரிகையாளர்களை அழைக்கவில்லை. நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லையா?“ என்று பல கேள்விகளை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கலெக்டர் தீபா சோழனிடம் கேட்டார். அவர் கேட்ட கேள்விகளுக்கு தீபா சோழனால் பதிலளிக்க முடியவில்லை.

மேலும் கோபத்துடன் இருந்த பிரகலாத் ஜோஷியை சமாதானம் செய்ய கலெக்டர் தீபா சோழன் முயன்றார். ஆனால் கலெக்டர் தீபா சோழன் கூறிய எதையும் பிரகலாத் ஜோஷி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்துபோன கலெக்டர் தீபா சோழன் அங்கு குவிந்திருந்த மக்கள் முன்னிலையில் மேடையிலேயே கண்கலங்கினார். மீண்டும் அவர் கண்கலங்கியபடியே பிரகலாத் ஜோஷியிடம் பேசி விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் அதையும் அவர் கேட்கவில்லை.

பரபரப்பு

இதற்கிடையே கலெக்டர் தீபா சோழன் கண்ணீர் சிந்தியதைப் பார்த்த மாநகராட்சி அதிகாரி சுரேஷ் இத்னால் மேடைக்கு விரைந்து வந்தார். இதையடுத்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநகராட்சி அதிகாரி சுரேஷ் இத்னாலையும் அழைத்து கடுமையாக கண்டித்தார். இவை அனைத்தும் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலையில் நடந்தது. ஆனால் அவர் கடைசி வரை மவுனமாக இருந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்