வடலூர் அருகே, தொழிலாளி மர்ம சாவு - போலீசார் விசாரணை
வடலூர் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்,
வடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 40) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வடலூர் - சேத்தியாத்தோப்பு மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஓடையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயவேல் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்து மருத்துவமனைக்கு வந்த குடும்பத்தினர், ஜெயவேல் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயவேல் எதற்காக ஓடைக்கு வந்தார்?, அவரை யாரேனும் தாக்கினார்களா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.