கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வீட்டு மனைப்பட்டா - கலெக்டர் வழங்கினார்

தென்னாங்கூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 16 தொழிலாளர்கள் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

Update: 2019-10-02 22:30 GMT
வந்தவாசி, 

வந்தவாசி தாலுகா தென்னாங்கூர் கிராமத்தில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கின்றது. கிராமங்களிலும், நகர் புறங்களிலும் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய - மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராம மக்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக குப்பைகளை சாலைகளிலோ, வீதிகளிலோ வீசக்கூடாது. அவ்வாறு வீசப்படும் குப்பைகளில் உருவாகும் கொசுக்கள் உங்களை கடிக்கும் போது தான் பல்வேறு நோய்கள் உருவாகின்றது என்பது உங்களுக்கு தெரியும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்று கிராமத்தையும் சுத்தமாக வைத்து சுகாதாரம் காக்க வேண்டும். சுகாதாரம் காக்கப்படும் போது உடல் நலன் காக்கப்படுகின்றது, இதன் மூலம் மருத்துவ செலவுகள் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து மேல்செம்பேடு கிராமத்தை சேர்ந்த விறகு வெட்டும் 16 தொழிலாளர் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

கூட்டத்தில் செய்யாறு உதவி கலெக்டர் விமலா, பயிற்சி கலெக்டர் ஆனந்தகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுவாமிநாதன், வந்தவாசி தாசில்தார்கள் எஸ்.முரளி, நரேந்திரன், வந்தவாசி ஒன்றிய ஆணையாளர்கள் ஆர்.குப்புசாமி, வி.ஆர்.ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்