ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக புதுமடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் யூனியன், புதுமடம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரக பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து கிராம பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் பேசியதாவது:-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் மின் வினியோகம் வழங்குவதில் குறைபாடு உள்ளதாகவும், தெரு விளக்குகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பினை மேம்படுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்ந்த செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் நிலை அலுவலர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு மின் வினியோகத்தினை சீர் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல தெருவிளக்கு பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி 100 சதவீதம் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளாட்சி துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. முதல்-அமைச்சர் உத்தரவுப்படி மழைநீரை சேமிக்க ஏதுவாக மாவட்டத்தில் உள்ள 69 பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள 221 சிறுபாசன கண்மாய்கள் மற்றும் 988 ஊருணிகளில் குடிமராமத்து திட்ட பணிகளின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து, கொசுக்களின் உற்பத்தியை தடுப்பதன் மூலம் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுத்திடலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், சண்முகநாதன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.