கடலூர் அருகே, மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு - பதற்றம்; துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு
கடலூர் அருகே மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அருகே நல்லவாடு மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 28-ந்தேதி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள், இது எங்கள் பகுதி. இங்கு நீங்கள் மீன்பிடிக்க கூடாது என்று கூறினர்.
இதனால் 2 கிராமத்தை சேர்ந்த மீனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. இதையடுத்து 2 கிராம மீனவர்களும் கடலில் மோதிக்கொண்டனர். பிறகு அனைவரும் கரைக்கு திரும்பினர். இந்த மோதல் சம்பவத்தால் 2 கிராம மீனவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நல்லவாடு மீனவர்கள், வழக்கம்போல் நேற்று முன்தினம் மீன்பிடித்து வந்ததும் தங்களது வலைகளை ஓரிடத்தில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள், அந்த மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், மர்ம நபர்களை பிடிப்பதற்காக விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து மீனவர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது. இது பற்றி தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தமிழக பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும், புதுச்சேரி பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியதால் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நல்லவாடு பகுதியில் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை தமிழக பகுதியை ஒட்டியுள்ள நல்லவாடு பகுதியில் புதுச்சேரி மாநில போலீஸ் சூப்பிரண்டு வீரபாலகிருஷ்ணன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி ஆகியோர் தலைமையில் மீனவர்களுக்கான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர்கள் பேசுகையில், கடந்த 28-ந்தேதி கடல் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எங்களிடம் தகராறு செய்து மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக புதுச்சேரி மாநில போலீசாருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக எங்கள் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எரித்து சென்று இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆகவே புதுச்சேரி மாநில போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினர். இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு வீரபாலகிருஷ்ணன் பேசுகையில், கடந்த 28-ந்தேதி நடைபெற்ற மோதல் தொடர்பாகவும், வலைகளை எரித்த குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வருங்காலங்களில் பிரச்சினை மற்றும் மோதல் சம்பவத்தில் யாரும் ஈடுபட கூடாது என அறிவுறுத்தினார். இதையடுத்து வலைகள் எரிக்கப்பட்ட பகுதியில் துப்பாக்கி ஏந்திய புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க தமிழகம் மற்றும் புதுவை எல்லைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் காரணமாக நல்லவாடு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையோரத்திலும், கடலிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.