கோத்தகிரி அருகே, நீரோடையில் தவறி விழுந்த சிறுவன் சாவு
கோத்தகிரி அருகே நீரோடையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள புதுகோத்தகிரியை சேர்ந்தவர் பாலகோபால். இவருக்கும், திருச்சிக்கடி கிராமத்தை சேர்ந்த பிரகதீஸ்வரி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வைஷவ் வெங்கடேஷ்(வயது 5) என்ற மகன் இருந்தான். திருமணம் முடிந்து 1 ஆண்டுக்கு பிறகு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பிரகதீஸ்வரி தனது மகனுடன் திருச்சிக்கடியில் பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியில் வைஷவ் வெங்கடேஷ் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு பிரகதீஸ்வரியின் தந்தை ஜெகநாதன் மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் தங்களது பேரனை அழைத்து கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 2 பேரும் தோட்ட வேலையை கவனித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்குள்ள நீரோடைக்கு அருகில் வைஷவ் வெங்கடேஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக நீரோடையில் அவன் தவறி விழுந்தான். நீரில் மூழ்கி தத்தளித்த அவன், சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதற்கிடையில் மதிய உணவு வழங்க ஜெகநாதன் மற்றும் பார்வதி தங்களது பேரனை தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவன் கிடைக்கவில்லை. உடனே அதுகுறித்து கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள நீரோடையில் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் தேடினர். இரவு 9 மணியளவில் நீரோடையில் இருந்து வைஷவ் வெங்கடேஷ் பிணமாக மீட்கப்பட்டான். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரோடையில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.