வேப்பனப்பள்ளி அருகே, குட்டையில் மூழ்கி 3 மாணவிகள் பலி
வேப்பனப்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி 3 பள்ளி மாணவிகள் உயிர் இழந்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளது நாச்சிக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் காப்பாளராக சகுந்தலா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
இந்த காப்பகத்திற்கு சொந்த மான தோட்டம் ஒன்று கங்கமடுகு என்ற கிராமத்தில் உள்ளது. தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் விடுதியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை காப்பாளர் சகுந்தலா கங்கமடுகு கிராமத் தில் உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அந்த பகுதியில் உள்ள குப்தா என்ற குட்டை அருகில் மாணவிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்த குட்டையில் தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதைப் பார்த்ததும் ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த யேசுப் பிரியா (வயது15), தர்ம புரியைச் சேர்ந்த சித்ரா (15), கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டியைச் சேர்ந்த அனுஷ்கா (10) ஆகிய 3 மாணவிகளும் குட்டையில் இறங்கி குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கினார்கள். இதைப் பார்த்த சக மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். அதற்குள் 3 மாணவிகளும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் 3 மாணவிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. பலியான மாணவிகள் யேசுப் பிரியா, சித்ரா ஆகியோர் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் 10-ம் வகுப்பும், அனுஷ்கா நாச்சிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தவர்கள் ஆவார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியான 3 மாணவிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக் காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 நாளில் 11 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8 நாட்களில் குட்டை, ஏரிகளில் மூழ்கி 11 மாணவ, மாணவிகள் பலியாகி உள்ளனர். கடந்த 24-ந்தேதி கந்திகுப்பத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் ஸ்டீபன் வெர்னே (11), அவரது தம்பி 1-ம் வகுப்பு மாணவன் கெர்சோன் ராஜ் (6) ஆகியோர் கந்திகுப்பம்-எலசகிரி சாலையில் உள்ள ஏரியில் மூழ்கி பலியானார்கள். கந்திகுப்பம் தாண்டவன்பள்ளம் 9-ம் வகுப்பு மாணவி சுபத்ரா (14), 4-ம் வகுப்பு மாணவி காவ்யா (9) ஆகியோர் கடந்த 25-ந் தேதி அந்த பகுதியில் உள்ள குட்டையில் மூழ்கி பலியானார்கள்.
இதேபோல ஓசூர் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி காவ்யா (11), கடந்த 26-ந் தேதி குட்டையில் தவறி விழுந்து பலியானார். ஊத்தங்கரை தாலுகா கீழ்மத்தூர் அண்ணா நகரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் திலீப்குமார் (14), 8-ம் வகுப்பு மாணவன் மணிகண்டன் (13) ஆகியோர் கடந்த 28-ந் தேதி கீழ்மத்தூர் கானாறு ஏரியில் மூழ்கி பலியானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பெலவர்த்தி பக்கமுள்ள தின்னூரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவன் விக்னேஷ் (8) என்பவர், அந்த பகுதியில் உள்ள குட்டையில் மூழ்கி பலியானான். நேற்று வேப்பனப்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவிகள் யேசுப்பிரியா (15), சித்ரா (15), அனுஷ்கா (10) ஆகியோர் குட்டையில் மூழ்கி பலியாகி உள்ளனர். கடந்த 8 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குட்டைகளில் மூழ்கி 11 மாணவ, மாணவிகள் இறந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் காலாண்டு விடுமுறையையொட்டி அந்த பகுதியில் உள்ள குட்டை, ஏரிகளில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.