பயிர் இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2019-10-01 23:00 GMT
சிவகங்கை,

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, வேளாண் துறை இணை இயக்குனர் கணேசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் சார்பில் சேங்கைமாறன், அய்யாச்சாமி, வீரபாண்டியன், தண்டியப்பன், ஆதிமூலம், சந்திரன், பரத்ராஜா, வக்கீல்ராஜா, மோடி பிரபாகரன், முத்துராமலிங்கம், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:- நமது மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டுக்கான பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. நமது மாவட்டத்தில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை.

சிவகங்கை சக்தி சர்க்கரைஆலை நிர்வாகம் முத்தரப்பு கூட்டத்தில் பேசியபடி விசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி தொகையை இதுவரை தரவில்லை. மேலும் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த பணத்தை வங்கியில் கட்டாததால் மீண்டும் கடன் பெற முடியவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சக்தி சர்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும்.

திருப்புவனம் பகுதியில் உரம், விதைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வெண்டும். விவசாயத்திற்கு மும்முனை மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க பூர்வீக சொத்து பத்திரம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:- உரிய ஆவணங்களுடன் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அந்தந்த பகுதி விவசாயிகள் மனு மூலம் புகார் தெரிவிக்கலாம். முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தை பொருத்தவரை கண்மாய் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், சீமைக்கருவேல மரங்கள் விரைவில் அகற்றப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை சக்தி சர்க்கரை ஆலை விரைந்து வழங்க வேண்டும். இல்லையெனில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வேளாண் பணிக்கு தேவையான விதைகள், உரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் அலுவலகங்களில் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். இதுதவிர விற்பனை நிலையங்களில் விதைகள், உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதுகுறித்து நேரடியாகவோ, மனு மூலமாகவோ தெரிவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்