திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2019-10-01 22:30 GMT
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அடுத்த மாதம் 2-ந்தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் அம்ரித் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், தாசில்தார் ஞானராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மின்வாரிய செயற்பொறியாளர்கள் சகர்பான், பிரபாகர், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைராஜ், கிளை மேலாளர் கண்ணன், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன் ரவி, தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி, யூனியன் ஆணையாளர் சுடலை, நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து துறைகளிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவில் வளாகத்தில் தற்போது 19 குடிநீர் தொட்டிகள் உள்ளன. விழாவை முன்னிட்டு கூடுதலாக தலா 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில் தற்போது ஆண்களுக்கான 118 கழிப்பறைகளும், பெண்களுக்கான 115 கழிப்பறைகளும் உள்ளன. மேலும் கூடுதலாக ஆண்கள், பெண்களுக்கு தலா 150 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படும்.

கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக, 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 2,500 பக்தர்கள் தங்கியிருக்கும் வகையில் குடிநீர் வசதியுடன் தற்காலிக கூடாரம் அமைக்கப்படும். கோவிலில் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில், தற்போது 2 ஜெனரேட்டர்கள் உள்ளன. மேலும் கூடுதலாக 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில் 300 வாகனங்கள் நிறுத்தும் வகையில், கூடுதலாக வாகன நிறுத்தும் இடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில், கடலில் மிதவை தடுப்புகள் அமைக்கப்படும். சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் தரிசிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் 8 இடங்களில் அகன்ற எல்.இ.டி. திரை அமைக்கப்படும்.

விழாவை முன்னிட்டு சுமார் 2,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவில் வளாகத்தில் 125 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு 210 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

கோவில் வெளிப்பிரகாரத்தில் ரூ.4 கோடியே 15 லட்சம் செலவில் தற்காலிகமாக சுற்றுப்பிரகார மண்டபம் அமைக்கப்பட உள்ளது. பின்னர் அங்கு சுமார் ரூ.60 கோடி செலவில் பழமை மாறாத வகையில் நிரந்தரமாக கல் மண்டபம் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கும் வகையில் ரூ.33 கோடி செலவில் யாத்திரை நிவாஸ் கட்டப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 3,847 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கிராமப்புற கோவில்கள், ஆதி திராவிட கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

மேலும் செய்திகள்