உத்தமபாளையம் அருகே வீடுகளில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்
உத்தமபாளையம் அருகே வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங் களுக்கு முன்பு உ.அம்மாபட்டியை சேர்ந்த ராமைய்யா, அழகுராஜா, விஜயா ஆகியோரது வீட்டின் பூட்டை உடைத்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 4 பேர் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் திருடன், திருடன் என சத்தம்போட்டதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொள்ளை முயற்சி நடைபெற்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்தது. இதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த னர். அதில் 4 கொள்ளையர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் வைத்து இருந்தனர். எனவே அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பகல் நேரங்களில் சந்தேகப்படும்படி தெருக்களில் வெளியூர் நபர்கள் யாரேனும் நடமாடினால் அதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் இரவில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.