திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும், தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் - இணை இயக்குனர் தகவல்
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகளின் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என்று இணை இயக்குனர் பூங்குழலி தெரிவித்துள்ளார்.;
திண்டுக்கல்,
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான உரிமத்தை, 2020-ம் ஆண்டுக்கு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் புதுப்பிக்க வேண்டும். இதற்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக https://dish.tn.gov.in எனும் இணையதளத்தில், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரகசிய குறியீட்டை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர் அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 3 நகல்களை, திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை, இணை இயக்குனர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், திண்டுக்கல் எனும் முகவரிக்கு வங்கி வரைவோலையாகவோ அல்லது ஆன்லைனிலோ செலுத்தலாம்.
மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசிநாள் ஆகும். அதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்களுக்கான பதிவு சான்று மற்றும் உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, திண்டுக்கல் நேருஜிநகர் ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று இணை இயக்குனர் பூங்குழலி தெரிவித்துள்ளார்.