அக்காள்-தம்பி வீடுகளில் 45 பவுன் நகை-4½ கிலோ வெள்ளி கொள்ளை போலீசார் விசாரணை

அக்காள்-தம்பி வீடுகளில் 45 பவுன் நகை-4½ கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-10-01 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மேலவஸ்தாசாவடி அசோக்நகர் 8-வது தெருவில் வசித்து வருபவர் சாமிநாதன்(வயது40). விவசாயி. இவருடைய அக்காள் இந்திரா(53). இவர் தனது குடும்பத்தினருடன் தம்பி சாமிநாதனின் மாடி வீட்டில் வசித்து வருகிறார்.

இவர்களது சொந்த ஊர் சோழகன்குடிகாடு கிராமம் ஆகும். இவர்களுக்கு சொந்தமான விளை நிலம் உள்ளது. அங்கு சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. இதனால் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சாமிநாதனும், இந்திராவும் சோழகன்குடிகாட்டிற்கு சென்று இருந்தனர். இரவு அங்குள்ள வீட்டில் தங்கிவிட்டனர்.

45 பவுன் நகை கொள்ளை

இந்நிலையில் நேற்றுகாலை தஞ்சையில் உள்ள சாமிநாதன், இந்திராவின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அக்காள், தம்பிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் தஞ்சைக்கு விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகையை காணவில்லை.

வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்க சங்கிலி, வெள்ளியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சாமிநாதன் வீட்டில் நெக்லஸ், ஆரம், வளையல் என 30 பவுன் நகையும், ரூ.1,500 ரொக்கமும், இந்திரா வீட்டில் வளையல், கம்மல் என 15 பவுன் நகையும், 4½ கிலோ வெள்ளியும், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் கொள்ளை போனது தெரியவந்தது.

மோப்பநாய்

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பீரோ, சுவர்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை போன வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி குடியிருப்பு அருகே பாரதிநகரில் பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விரிவாக்கப்பகுதிகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்