அனுமதியின்றி மண் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மணல்மேடு அருகே அனுமதியின்றி மண் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-01 23:00 GMT
மணல்மேடு,

மணல்மேடு அருகே காளி ஊராட்சியில் விளைநிலத்தில் அரசு அனுமதியின்றி 20 அடி ஆழத்துக்கு மண் எடுப்பதாக அந்தபகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், அனுமதியின்றி விளைநிலத்தில் மண் எடுப்பதை கண்டித்தும், மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மண் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் மற்றும் மணல்மேடு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மணல்மேடு-காளி சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்