வங்கி பெண் அதிகாரி பலாத்கார வழக்கு: கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை

புதுடெல்லி வங்கி பெண் அதிகாரி பலாத்கார வழக்கில் தஞ்சை மகளிர் நீதிபதி முன்னிலையில் கும்பகோணம் இன்ஸ்பெக்டரிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.

Update: 2019-10-01 22:15 GMT
தஞ்சாவூர்,

புதுடெல்லியில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணி புரிந்து வரும் பெண் ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி இரவு கும்பகோணத்திற்கு வந்தார். அங்கிருந்து பயணியர் விடுதிக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறி அவர் பயணம் செய்தார்.

ஆனால் டிரைவர் அரை மணி நேரமாக கும்பகோணம் நகரை ஆட்டோவில் வலம் வந்தபடியே இருந்தாரே தவிர பயணியர் விடுதியில் சென்று அந்த பெண்ணை இறக்கி விடவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், செட்டிமண்டபம் அருகே ஆட்டோ சென்றபோது ஏன் இந்த பகுதிக்கு செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார். உடனே அங்கேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டு ஆட்டோவுடன் டிரைவர் சென்று விட்டார்.

பாலியல் பலாத்காரம்

பின்னர் இருள்சூழ்ந்த பகுதியில் தனியாக நடந்து சென்ற அந்த பெண்ணை சிலர் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு மறைவான இடத்திற்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணைக்கு பின்னர் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ்(வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த்(21), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன்(19), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன்(19) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை

இந்த வழக்கு தஞ்சை மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 33 சாட்சிகளிடம் அரசு வக்கீல் தேன்மொழி விசாரணை நடத்தியுள்ளார். நேற்றுடன் அரசு தரப்பு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்த வக்கீல்கள் குறுக்கு விசாரணையை தொடங்கினர். நீதிபதி எழிலரசி முன்னிலையில், இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

வக்கீல்களின் கேள்விகளுக்கு இன்ஸ்பெக்டர் பதில் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். கோர்ட்டில் இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டதால் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் கோர்ட்டுக்கு வந்து விசாரணையை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்