இறந்த குழந்தைக்கு உயிர் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

இறந்த குழந்தைக்கு உயிர் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-01 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த வயலூரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பிரீத்தி. இவர்களுக்கு 1½ வயதில் கெவின் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று அதிகாலை பிரீத்தி தனது குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு படுக்க வைத்தார். சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்கள் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து ஒரு கார் மூலம் பாஸ்கர் தம்பதியினர் தங்கள் குழந்தையை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

உயிர் இருப்பதாக கூறியதால் பரபரப்பு

பின்னர் அவர்கள், குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். அங்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டு இருந்தனர். அங்கு இருந்த பெண்கள் குழந்தையின் உடலை தொட்டு கதறி அழுதனர்.

அப்போது இறந்து விட்டதாக கூறப்பட்ட குழந்தை கண் விழித்து பார்த்ததாகவும், கைகளால் தங்கள் விரல்களை இறுகப்பற்றியதாகவும், குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும் பெண்கள் சிலர் தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

இதனால் குழந்தையை காரில் மீண்டும் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது குழந்தைக்கு உயிர் இருக்கிறது. இதனால் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து டாக்டர்கள் மீண்டும் அந்த குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தை 2 மணி நேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அப்போது பாஸ்கர் தம்பதியினருடன் திரண்டு வந்த அந்த ஊரைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் டாக்டர்கள் குழந்தைக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்கள் விளக்கம்

இதையடுத்து குழந்தையின் உறவினர்களை அழைத்து டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள், குழந்தை இறந்ததில் சந்தேகம் இருந்தால் பிரேத பரிசோதனை செய்து இறப்பு சான்றிதழ் வழங்க தயாராக இருக்கிறோம். குழந்தை இறந்து விட்டதாக தெளிவுபடுத்தி விட்டோம். குழந்தைக்கு சளி இருந்த நிலையில் பால் கொடுத்துவிட்டு படுக்க வைத்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.

அதனைக்கேட்ட பாஸ்கர் தம்பதியினர் தங்கள் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம். குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து செல்கிறோம் என்று கூறி கண்ணீர் மல்க குழந்தையின் உடலை எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை நேற்று பர பரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்