திருப்பூரில் குடோன் அமைத்து விற்பனை: 1,510 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூரில் குடோன் அமைத்து பேக்கரி, டீக்கடைகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 1,510 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வேனுடன் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர்,
உணவு பாதுகாப்பு ஆணையாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பேக்கரி மற்றும் டீக்கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.
அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காங்கேயம் கிராஸ் ரோடு குமாரசாமி காலனி முதல் தெருவில் குடோன் அமைத்து கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் படி அதிகாரிகள் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த பகுதிக்கு வந்த சரக்கு வேனை அதிகாரிகள் நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில் கலப்பட டீத்தூள் இருந்தது தெரியவந்தது. வேன் டிரைவரிடம் விசாரித்தபோது அங்குள்ள குடோனுக்கு டீத்தூள் கொண்டு வந்ததாக தெரிவித்தார். பின்னர் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அங்கு 360 கிலோ கலப்பட டீத்தூள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சரக்கு வேனில் இருந்த 1,150 கிலோ கலப்பட டீத்தூளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்துல் ரகீம் என்பவர் குடோனை வாடகைக்கு எடுத்து கோவையில் இருந்து கலப்பட டீத்தூளை வாங்கி, பாக்கெட்டுகளில் அடைத்து பேக்கரி, டீக்கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட குடோனை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அப்துல் ரகீம் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட டீத்தூளில் சாயம் அதிக அளவுக்கு சேர்க்கப்பட்டுள்ளதால், கொஞ்சம் டீத்தூளில் அதிகளவு டீ போட முடியும். இந்த டீயை குடிக்கும்போது வயிற்று உபாதை மற்றும் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.